அண்ணா பின்னாடியே வீட்டுக்கு போனா அக்காவும்,மாமாவும் அவங்க பசங்களும் வீட்டு வாசலிலேயே காத்துகிட்டு இருந்தாங்க.நல விசாரிப்பெல்லாம் முடிஞ்சு கொண்டுட்டு போன பொருட்களையெல்லாம் பங்கியும் கொடுத்தாச்சு.அப்ப அக்கா இங்க வாயேன் உனக்கு ஒரு சர்ப்பரைஸ் இருக்குன்னு வீட்டுக்கு பின்னாடி கூட்டிட்டு போனா...ஆஹா அங்க பாத்தா ரெண்டு தூரி (ஊஞ்சல்) இருந்தது..இதும் மேலயும் எனக்கு எப்பவும் ஒரு கிரேஸ்,விடுவமா உடனே ஓடி போயி நானும் பொண்ணும் ஆட கேக்கவா வேணும்.
அப்படியே அக்கம் பக்கம் இருக்கறவங்க விசாரிக்க வந்தாங்க. அந்த ஊர்ல ஒரு பழக்கம் எப்ப ஊருக்கு திரும்ப போறங்கறது தான் முதல்ல விசாரிப்பாங்க அப்புறம் மிச்ச கதையையெல்லாம் பேசுவாங்க,அப்படி தான் இந்த தடவையும் நடந்துச்சு.அப்படியே அண்ணா, அக்கா கூட பழைய கதைகளை பேசி பேசி அன்னைக்கத்த பொழுது போயிடுச்சு.அடுத்த நாள் எங்க அத்தை மகன் வீட்டுக்கு போனோம் இப்ப 75 வயசுக்கும் மேல இருக்கும்.அவர் தான் அப்பா குடும்பத்தில் எங்க தலைமுறையில் மூத்தவர் அதனால அவர் மேல எல்லார்க்கும் மதிப்பும் மரியாதையும் ஜாஸ்தி.
அவர் அன்னைக்கு முக்கியமான ஒரு விஷயத்தை சொன்னார் அதாவது எங்க தலைமுறையில் யாரும் குடும்ப கோவிலுக்கு போறதில்லை, பூஜைகளும் செய்யறதில்லைனும்,அதற்காக அவரோட சேர்ந்து இந்த குடும்பத்தை சேர்ந்தவங்க சில பேரும் ஒரு கமிட்டி ஏற்படுத்தி இந்த குடும்பத்தை சேர்ந்தவங்களை கண்டுபிடிச்சு பேமிலி ட்ரீ உருவாக்கபோறோம்னு சொன்னார் எங்களுக்கும் அதை கேட்டு சந்தோஷமாயிடுச்சு..புது உறவுகள் கிடைக்குமேனு தான். அப்படியே எங்க குடும்பத்தை சேர்ந்த எல்லாரோட ஊரும் பேரும் இன்னும் சில விவரங்களையும் கொடுத்தோம்.
அதுக்கு அடுத்த நாள் ஆயில்ய நட்சத்திரம் வர்றதாகவும் அன்னைக்கு எங்க குடும்ப சாமி நாகராஜாவுக்கு பூஜை பண்ண முடியுமானு கேட்டார்..உடனே சரினு சொல்லிட்டோம்.அதுக்குண்டான பணத்தையும் குடுத்துட்டு எத்தன மணிக்கு அங்க இருக்கணும்னு விசாரிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.