Thursday, December 17, 2009

ஆண்டு ஒன்று




ஆஹா நானும் ஒரு வருஷம் கடந்துட்டேனே!!!!எழுத நினைச்சது நிறைய ஆனா எழுதினது ரொம்ப குறைவு.



Tamil Top Blogs

Tuesday, December 8, 2009

ஆழப்புழா - ஒரு பயணம் 3

Tamil Top Blogs

அடுத்த நாள் காலையில் எல்லாரும் டைம்க்கு அங்க இருக்கணும்னு பிளான் பண்ணினா, ராத்திரியிலிருந்தே நல்ல மழை இருந்தாலும் எல்லாரும் ரெடியாயிட்டோம்.ஒரே கார்ல இத்தன பேரும் போகமுடியாதே...அதனால ரெண்டு டிரிப் போகலாம்னு..ரெண்டு டிரிப்பா போய்சேர்ந்தோம்.அங்க போனா பூஜைக்குண்டான எந்த அறிகுறியையும் காணோம், கோவிலுக்கு பக்கத்தில் குடியிருக்கும் மூணு பேர் மட்டும் தான் இருந்தாங்க.

அவங்ககிட்ட கேட்டா வேற ஒரு குடும்பத்தில இதே மாதிரி பூஜை நடக்குதுன்னும் அதை முடிச்சிட்டு இங்க வருவாங்கன்னும் சொன்னாங்க.சரி எத்தன நேரந்தான் சும்மா இருக்கறதுன்னு ஊரையாவது சுத்தி பாக்கலாம்னு அண்ணியும் நானும் பசங்களோட கிளம்பிட்டோம்.சுத்தியும் நெல்வயலும் அங்கங்க வீடுகளும்,தென்னந்தோப்பும்,மாந்தோப்பும்,வீடுகளில் வாத்துபண்ணையும்,மாடுகளுமா ஒரு நல்ல கிராமத்தை பார்க்கமுடிஞ்சது.

இப்படி ஊரை சுத்தி பாத்துட்டு வந்தோம்..அப்ப தான் பூஜைக்குண்டான சாமான்களோட பூசாரியும் வந்தார்.அவரே தான் பொங்கல் பாயாசம் எல்லாம் செய்வாராம் அதனால அந்த பக்கம் யாரையும் விடலை...சாப்பிட்டா மட்டும் போதும்னா அதுக்கு ரெடியா தான் இருக்கேன்னு மனசுக்குள்ளே சொல்லிகிட்டேன். இதுக்குள்ள சாமிகளுக்குக்கு எண்ணெயால அபிஷேகம் நடத்தி மஞ்சளை தூவி விட்டாங்க அதுக்கு மேல உப்பையும் போட்டு அதுக்கப்புறம் தான் பூ அலங்காரம் பண்ணினாங்க.

சாமிக எல்லாம் சிமெண்ட் மேடை மேல இருந்தது அதனால அஞ்சு குத்துவிளக்கை கீழே வச்சி,விளக்குக்கு பக்கத்திலே அஞ்சு வாழையிலை போட்டு அது மேல வாழைதண்டையும்,பாக்கு மரத்தோட பாளையும் கட் பண்ணி சின்ன சின்ன துண்டுகளும் அதுகூட பாக்கு மரத்தோட குருத்துகளையும் எல்லா இலையிலயும் வெச்சிருந்தாங்க.அதுக்குள்ள பூசாரி பாயாசம் எல்லாம் ரெடி பண்ணிட்டு, ஒரு பெரிய பாத்திரத்தில் மஞ்சதூளையும்,அரிசிப்பொடி,சந்தனம்,கொஞ்சம் பாக்கு குருத்தையும் ஒண்ணா கலக்கி எடுத்துகிட்டார்.

அதோட வித விதமான பூக்களும்,சின்ன சின்ன குச்சிகளில் வெள்ளை துணியில் தீப்பந்தம் மாதிரியும்,பெரிய பாத்திரத்தில் பாலும்,ஒரு குடம் தண்ணி,கற்பூரதட்டு ஊதுபத்தி,நைவேத்தியங்களோடு இந்த இழைகளுக்கு முன்னால ஒரு பலகை போட்டு உட்கார்ந்து பூஜை பண்ண ஆரம்பிச்சார்.

Sunday, November 29, 2009

ஆழப்புழா - ஒரு பயணம் 2

Tamil Top Blogs
அண்ணா பின்னாடியே வீட்டுக்கு போனா அக்காவும்,மாமாவும் அவங்க பசங்களும் வீட்டு வாசலிலேயே காத்துகிட்டு இருந்தாங்க.நல விசாரிப்பெல்லாம் முடிஞ்சு கொண்டுட்டு போன பொருட்களையெல்லாம் பங்கியும் கொடுத்தாச்சு.அப்ப அக்கா இங்க வாயேன் உனக்கு ஒரு சர்ப்பரைஸ் இருக்குன்னு வீட்டுக்கு பின்னாடி கூட்டிட்டு போனா...ஆஹா அங்க பாத்தா ரெண்டு தூரி (ஊஞ்சல்) இருந்தது..இதும் மேலயும் எனக்கு எப்பவும் ஒரு கிரேஸ்,விடுவமா உடனே ஓடி போயி நானும் பொண்ணும் ஆட கேக்கவா வேணும்.

அப்படியே அக்கம் பக்கம் இருக்கறவங்க விசாரிக்க வந்தாங்க. அந்த ஊர்ல ஒரு பழக்கம் எப்ப ஊருக்கு திரும்ப போறங்கறது தான் முதல்ல விசாரிப்பாங்க அப்புறம் மிச்ச கதையையெல்லாம் பேசுவாங்க,அப்படி தான் இந்த தடவையும் நடந்துச்சு.அப்படியே அண்ணா, அக்கா கூட பழைய கதைகளை பேசி பேசி அன்னைக்கத்த பொழுது போயிடுச்சு.அடுத்த நாள் எங்க அத்தை மகன் வீட்டுக்கு போனோம் இப்ப 75 வயசுக்கும் மேல இருக்கும்.அவர் தான் அப்பா குடும்பத்தில் எங்க தலைமுறையில் மூத்தவர் அதனால அவர் மேல எல்லார்க்கும் மதிப்பும் மரியாதையும் ஜாஸ்தி.

அவர் அன்னைக்கு முக்கியமான ஒரு விஷயத்தை சொன்னார் அதாவது எங்க தலைமுறையில் யாரும் குடும்ப கோவிலுக்கு போறதில்லை, பூஜைகளும் செய்யறதில்லைனும்,அதற்காக அவரோட சேர்ந்து இந்த குடும்பத்தை சேர்ந்தவங்க சில பேரும் ஒரு கமிட்டி ஏற்படுத்தி இந்த குடும்பத்தை சேர்ந்தவங்களை கண்டுபிடிச்சு பேமிலி ட்ரீ உருவாக்கபோறோம்னு சொன்னார் எங்களுக்கும் அதை கேட்டு சந்தோஷமாயிடுச்சு..புது உறவுகள் கிடைக்குமேனு தான். அப்படியே எங்க குடும்பத்தை சேர்ந்த எல்லாரோட ஊரும் பேரும் இன்னும் சில விவரங்களையும் கொடுத்தோம்.

அதுக்கு அடுத்த நாள் ஆயில்ய நட்சத்திரம் வர்றதாகவும் அன்னைக்கு எங்க குடும்ப சாமி நாகராஜாவுக்கு பூஜை பண்ண முடியுமானு கேட்டார்..உடனே சரினு சொல்லிட்டோம்.அதுக்குண்டான பணத்தையும் குடுத்துட்டு எத்தன மணிக்கு அங்க இருக்கணும்னு விசாரிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.

Thursday, November 19, 2009

ஆழப்புழா - Allapuzha ஒரு பயணம் 1

Tamil Top Blogs
ஆழப்புழாவுக்கு டிரெயின் டிக்கெட் ஆன்லைனில் புக் பண்ணவேண்டியது ஒரு வாரம் கழிச்சு கேன்சல் பண்ணவேண்டியது இப்படியே மூணு மாசமா நடந்திட்டிருந்தது..வீட்ல எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க,சீக்கிரமே ஆன்லைன் டிரான்ஷேக்ஷ்னை பேங்கே நிறுத்திரும்னு..சரி போனா போகுதுனு நவம்பர் 4லுக்கு புக் பண்ணிட்டேன்.கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் ரொம்ப ஈசியா டிக்கெட் கிடைச்சது இப்ப ஒரு மாசம் முன்னாடினா கூட வெயிட்டிங் லிஸ்ட்ல தான் கிடைக்கும்.

அப்படி என்ன தான் அந்த ஊர்ல இருக்குனு கேட்டா, என்னோட அப்பா அம்மாவுக்கு சொந்த ஊர் இது.என்னை தவிர அண்ணன்களும் அக்காவும் பிறந்த ஊரும் இதுதான்.சொந்தபந்தமும்,அக்காவும் அங்க இருக்கறதால எங்களுடைய வெகேஷன் ஸ்பாட்ல அதுக்கு முக்கியத்துவம் ரொம்பவே.இந்த தடவை பெரியண்ணா குவைத்திலேயிருந்து வந்திருக்கறதால அவரை பாக்கறதுக்காக தான் இந்த பயணம்.அங்க போய் சேர்றவரைக்கும் பத்து போன்காலாவது வந்திருக்கும்..இந்த தடவையாவது ஊருக்கு வந்திருவே தானேனு.

பெங்களூரில் இருந்து 694 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு, 12 மணியிலிருந்து 16 மணி நேர பயணம்.நாங்க (நானும் மகளும் தான்) போனது கொச்சுவெளி (இது ஒரு ஊர் பேர்..இப்ப தான் தெரிஞ்சது இப்படியெல்லாம் ஒரு ஊர் இருக்குனு)எக்ஸ்பிரஸ்,இங்கிருந்து சாயாங்காலம் அஞ்சேகாலுக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம்,பங்காரபேட் ஜோலார்பேட் ஈரோடு,கோவை பாலக்காடு திருச்சூர் எர்ணாகுளம் அடுத்தது ஆழப்புழைக்கு அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு போய் சேர்ந்தோம்.

எனக்கும் இந்த ஊர் ரெயில்வே ஸ்டேஷனுக்கும் ரொம்பவே ராசி..இங்க இருக்கறதே ரெண்டு பிளாட்பார்ம்,அதுல ஒண்ணாவது பிளாட்பார்ம் மெயின் கேட்கிட்டயும் ரெண்டாவது பிளாட்பார்ம் அதுக்கு பின்னாடி இருக்கறதால சின்ன பிளைஓவர் வழியா தான் மெயின் கேட்டுக்கு வரணும்.என்னை தவிர வீட்ல இருந்து யார் போனாலும் முதல் பிளாட்பாரம்ல தான் டிரெயின் நிக்கும் எனக்கு எப்பவும் ரெண்டாவது.எப்ப அங்க போனாலும் யாராவது கூட்டிட்டு போறதுக்கு வருவாங்க ஆனா நா மூட்டைமுடிச்செல்லாம் தூக்கிட்டு மெயின்கேட்டுக்கு வந்தபிறகு தான் அவங்க வந்துசேர்வாங்க.

இந்த தடவையும் அப்படிதான்,அண்ணாவும் அண்ணியும் பெட்ரோல் போட்டுட்டு வர்றதுக்கு லேட்டாயிடுச்சுனு ஓடி வந்தாங்க..அப்ப எனக்கு வந்த கடுப்பில...என்ன பண்ணமுடியும் அண்ணாவாச்சே.சிரிச்சிட்டே அவங்க பின்னாடி போயிட்டேன்.

Tuesday, October 20, 2009

கருடா மால்

பெங்களூரின் முக்கியமான மால்களில் ஒன்று.இங்க பிராண்டடு(துட்டு பத்தி கவலை இல்லாத)கடைக மட்டும் தான் இருக்கும்.சில சைனா ஐட்டங்களும் இருக்கு..தரத்தை பத்தி சொல்ல வேண்டியது இல்லைனு நினைக்கறேன்.ஓரளவுக்கு எல்லாராலும் வாங்க முடியற துணிக்கடைனா வெஸ்ட்சைடை(Westside)சொல்லலாம்.பொழுது போக்கவும்,பார்க்கிங் பண்ண இடமும் கிடைச்சா நல்ல இடம்.



இது தான் கிரவுண்ட் ப்ளோர் எப்பவுமே டி.ஜே அல்லது வி.ஜேக்களோட ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்துகிட்டே இருக்கும்.போன வருஷம் சில ப்ரொபஷனல் டேன்சர்ஸ் கூட என் பொண்ணும் டேன்ஸ்(அப்படினு மனசை தேத்தி) பண்ணினா.குக்கீஸ்,ஐஸ்க்ரீம்,ஹோம்மேடு சாக்லேட்ஸ்,கார்ன்‘ஸ்.ப்ரெஸ் ஜீஸ்னு இந்த தளத்திலும் கிடைக்கும்.




முதல் தளத்திலிருந்து அஞ்சாவது வரைக்கும் போக எலவேட்டரும், எஸ்கலேட்டரும் படிகளும் இருக்கு.ரொம்பவே குறுகலான எஸ்கலேட்டர்..அதுக்கே கீழே மேலேனு செக்கியூரிட்டி.திருப்பதி தான் ஞாபகத்துக்கு வருது.



இது தீபாவளி கொண்டாட்டத்தின் விளக்குகள்.எல்லா கடைகளிலும் 10 முதல் 50% வரை தள்ளுபடி விற்பனை.டெம்பரவரி டாட்டூ போடும் கடைகளில் குட்டீஸ்களின் கலாட்டா...இந்த டிசைன் அந்த டிசைன்னு..அதுக்கு 50 மற்றும் 100 ரூபாய்.அடுத்தது புட்கோர்ட்..கொள்ளை விலைக்கு கொஞ்சமே கொஞ்சமே எல்லாம் சாப்பிடக்கிடைக்கும்.இங்க சில பேரு நாகரீகமா சாப்பிடற ஸ்டைலை பார்த்தா ஏன்தான் இப்படி சாப்பிடகூட நடிக்கறாங்களோனு தோணுது.

அதே போல ஒரு சாரர் கல்யாணத்துக்கு போற மாதிரியும் சில பேருங்க நமீதாவுக்கு தங்கச்சி மாதிரியும் வந்திருவாங்க..இதையெல்லாம் பார்க்கறதுக்கு ஒரு கூட்டம் எப்பவும் ஸ்குவாடு மாதிரி சுத்திகிட்டே இருக்கும்.இங்க (PUB)பப்பும் இருந்தாலும் ரொம்பவே சைலண்ட்டா தான் இருக்கு(அப்ப இருந்தது).வீடியோ கேம்ஸ், சினிமா ஹால்ஸ்,நகைக்கடை, காபி ஷாப்ஸ்னு அடுக்கிட்டே போலாம்.

இங்க Tresspassனு ஒரு பியூட்டி பார்லரில் பார்த்தது...நாலா பக்கமும் க்ளாஸ் வழியா உள்ள பாக்க முடியும்.ஒரு பக்கம் ஆணுக்கு முடி வெட்டு, அதுக்கு பக்கத்திலேயே பொண்ணுக்கு பெடிக்யூர் பண்ணிட்டு இருக்காங்க, இப்படி பல பேர் உள்ள.வெளியே பத்து பேர் அப்பாயின்மெண்ட்டோட வெயிட்டிங்.


இந்த வலை போடறதுக்கு ஒரு காரணம் இருக்கு போன வருஷம் ஒரு குழந்தை மேலேயிருந்து எட்டி பார்க்கும் பொழுது கீழே விழுந்து இறந்துவிட்டது..அந்த அசம்பாவிதத்துக்கப்புறம் இப்படி வலை போட்டு பாதுகாப்பை ஏற்படுத்திட்டாங்க.
Tamil Top Blogs

Friday, October 16, 2009

Coorg - கூர்க்

மலைகளும் காபிதோட்டங்களும் சூழ்ந்திருக்கும் இடம் தான் கூர்க்.பெங்களூரில் இருந்து 260 கிலோமீட்டரில் தூரத்தில் இருக்கும் ஒரு மாவட்டம். கர்நாடகத்தில் இருந்தாலும் கலாசாரம்,உணவு,மொழி,திருமணம் எல்லாம் வேறுபட்டு தான் இருக்கு.கன்னடா பேச தெரிந்தாலும் குடவா தான் அவங்க தாய்மொழி.இந்திய மொழிகளின் கலவையா இருக்கறதால ஓரளவுக்கு புரிஞ்சிக்க முடியும்.

மைசூர் வழியா போனா குஷால் நகர்,சொண்டிகுப்பா,மடிக்கேரி என்கிற மர்க்காரா போன்ற இடங்களில் தங்குவதற்கு தேவையான ஹோட்டல்களும், ஹோம்ஸ்டே மற்றும் ரிசாட்டுகளும் உள்ளது.ஹோம்ஸ்டே தான் இங்கு மிக பிரபலம்.சின்ன சின்ன ஹட்டிலிருந்து பெரிய பங்களா வரைக்கும் வாடகைக்கு கிடைக்கும், தேவையானால் சமையல்காரரும்,நாமே சமைக்கும் வசதியும் இங்கு உண்டு.



நாங்க தங்கியிருந்த ஹோம்ஸ்டேயின் ஒரு பக்கத்து தோட்டம் தான் மேலேயிருக்கும் போட்டோ.



இந்த இடத்துக்கு பேரு ராஜா சீட்.இங்க ஒரு சின்ன மண்டபம் இருக்கு ராஜா ராணி இருந்த காலத்தில் தினமும் சூரிய அஸ்தமனத்தை பார்க்க இங்க வந்ததால இந்த பேரும் வந்திருச்சு.பனிமூட்டத்தால் போட்டோ சரியா எடுக்கமுடியலை.



இது பாகண்டேஸ்வரர் கோவில் முகப்பு.சிவன் தான் இங்கு முக்கிய தெய்வம்..வழிபாடு முறைகள் அப்படியே கேரளாவை ஒத்து இருக்கு.இந்த கோவிலுக்கு எதுத்தாப்பலேயே காவிரி ஆறும் ஓடுது.இந்த ஊரை சேர்ந்தவங்க அவங்க குடும்பத்தில் யார் இறந்தாலும் இங்க வந்து காவிரியில் கரைச்சுட்டு சிவன் கோவிலில் பூஜை செய்வாங்களாம்.தலைக்காவேரி போகும் வழியில் இந்த கோவில் இருப்பதால் இங்க தான் முதல் விசிட்.



தலைக்காவேரி போகும் வழியில் எடுத்த போட்டோ இது..மதியம் 12 மணிவாக்கில் இப்படி இருந்தா விடிகாலையில் எப்படி இருந்திருக்கும்?



இது தலைகாவேரியின் அடிவாரம்.இதுக்க மேல இருக்கிற எல்லா இடங்களிலும் போட்டோவோ வீடியோவோ எடுக்ககூடாதுனு அறிவிப்பு இருந்ததால எதுவும் எடுக்கலை.எனக்கு இந்த இடத்துமேல ஒரு ஈர்ப்பும் இருக்கு..சின்ன வயசில்,பட பேரு ஞாபகம் இல்லை. சிவாஜியும் மஞ்சுளாவும் சேர்ந்து இங்க குறிஞ்சி மலர்களேனு பாடுவாங்க..அதையே எதிர்பார்த்து தான் போனேன் ஆனா இப்ப மார்பிள் போட்ட கோவிலை தான் பார்க்க முடிஞ்சது.

அடிவாரத்தில் இருந்து 20 படிகள் தான் இருக்கும்,பனிமழை பொழியறதால காலு அதுக்கே உணர்வில்லாம போயிடுது..ஆனா அங்க இருக்கும் பூஜாரிகள் பஞ்சகச்சம் ஒரு அங்கவஸ்திரத்தோட இருக்காங்க.இங்கயும் தட்டு நிறைய காசுக்கு தான் ஆரத்தி கிடைக்கும்.காவேரி தொடங்கிற இடமானதால் ஒரு வித சிலிர்ப்பு உண்டாகுது.அந்த தண்ணியை யாரும் தொட அனுமதியில்லை,டிரம்களில் தண்ணி நிரப்பி வெச்சிருக்காங்க அதையே தான் எடுத்து குளிக்கவோ,குடிக்கவோ முடியும்.



இது அபி (ABBI) அருவி.பத்தடிக்கு முன்னாடியே வேலி போட்டு இருக்கு.கார்டும் இருக்கறதால எல்லை தாண்டி எங்கயும் போக முடியாது.கொள்ளை அழகு..விட்டு வர மனசு கொஞ்சம் வலிக்கும்.



இது அரபிக் காபியின் செடி.இந்தியன் காபி கொட்டைக்கு விலை கம்மி அதனால் அதை விட மகசூலும் விலையும் தருகிற இந்த காபி கொட்டைக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.






இது திபெட்டியன் காலனியில் இருக்கும் புத்தா தங்க கோவில்.ஒரு கிராமம் முழுதும் இவங்க குடியிருப்பு. எங்கு காணினும் புத்த பிட்சுக தான் அதுவும் நாலு வயசிலிருந்து.குட்டி பிட்சுக அழகோ அழகு.ரொம்பவே அமைதியான புத்த மடம்.

எல்லா அவசரகதியை விட்டு அமைதியா இருக்க ஏத்த இடம்.வித்தியாசமான உணவுகள்..கடுபூ என்கிற கொழுக்கட்டை,தரிப்புட்டு, கீமா தோசை,அட்டகாசமான காபி.மியூசியம்,இஸ்லாமிய முறைப்படி கோபுரம் இருக்கும் சிவன் கோவில்,அரண்மனை இன்னும் சில பல மிஸ் பண்ண தோணாத இடங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்.
Tamil Top Blogs

Friday, September 4, 2009

மைசூர் டிரிப்

Tamil Top Blogs

டூர் போறதுனாலே எல்லார்க்கும் சந்தோஷம் தானே..அப்படி நினைச்சு தான் மைசூருக்கு போலாம்னு தயாரானோம்.போனது 2006 மே மாதத்தில்.ரெண்டு நாள் டிரிப்புக்கு தேவையானதை எடுத்துகிட்டோம்.விடிகாலை 5 மணிவாக்குல எங்க பிரயாணத்தை தொடங்கினோம்.நாலு மணி நேரத்தில் ஸ்ரீரங்கப்பட்னா போய் சேர்ந்தோம்,திப்பு சிறைச்சாலை,காவேரி ஆறு, ரங்கநாதசாமி கோவில் எல்லாம் சுத்தி பார்த்துட்டு,அங்கிருந்து நேரா மிருக காட்சி சாலை போனோம்.பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாதுனு முகப்பிலேயே பேப்பர் கவர்களை விநியோகம் செய்யறாங்க.


நாங்க கொண்டு போன கவர்களை குடுத்துட்டு பேப்பர் கவர்களோடு உள்ள போனோம்.விலங்குகளை பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு...சுதந்திரமில்லா வாழ்க்கை.சுத்தி பார்த்துட்டு சாப்பாட்டு நேரத்துக்கு வெளியே வந்தோம்.போற வழியில் சாப்பாடை முடிச்சிட்டு ஹோட்டல் ரூம் தேட ஆரம்பிச்சோம்.ரெண்டு மூணு இடங்களில் ரூம் காலியில்லைனு சொல்ல எங்க தேடுதல் வேட்டை தொடர்ந்தது.கடைசியில் ஒரே ஒரு ரூம் மட்டும் நாலு பெட்டோட இருக்க ஒரு நாள் தானேனு எடுத்துகிட்டோம்.

ரூமில் கொஞ்ச நேர ரெஸ்ட்டுக்கு பிறகு மைசூர் பேலஸை பார்க்க கிளம்பினோம்.சின்ன வயசில பார்த்ததுக்கும் இப்ப பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.பல அறைகள் பாதுகாப்பு கருதி பூட்டியிருந்தது.அதுனால சுவாரஸ்யம் கொஞ்சம் கம்மியாயிருச்சு.அங்கயும் இங்கயுமா சுத்தி எட்டு மணிக்கு ரூமுக்கு போயிட்டோம்.அடுத்த நாளும் சுத்த போகணுமே அதனால சீக்கிரம் சாப்பிட்டு தூங்கிடலாம்னு நினைச்சு பக்கத்தில் இருந்த ஹோட்டலில் ஆர்டர் கொடுத்தோம்.வந்தது,சாப்பிட்டாச்சு,தூங்கியும் ஆச்சு.

விதி அப்பப்ப சதி செய்யுமாமே..முதல் நாள் டின்னர் வேலையை காமிக்க ஆரம்பிச்சுது.எப்படியோ சமாளிச்சு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு போனோம்,அங்க பார்த்தாக்க ஒரே கூட்டம்..எதுக்கு உள்ள போயிட்டு ஆத்தர அவசரம்னா வெளிய வரமுடியாதுன்னு கொடி மரத்துகிட்டேயே தரிசனம் பண்ணிட்டோம்.அப்படியே நந்தியையும் பார்த்துட்டு சோம்நாத்பூர் போலாம்னு கிளம்பினோம்.என்னை தவிர எல்லாரும் ஓரளவு நார்மலாயிட்டாங்க.எனக்கோ ஒரே டென்ஷன்..போறபக்கமெல்லாம் பாத்ரூம் இருக்கணுமே!!!.

சோம்நாத்பூரில் கட்டிடகலை பெருமை வாய்ந்த கோவில் இருக்கு.அதை பார்க்க போற வழியில் அண்ணி சொன்னாங்களேனு ரெண்டு மாத்திரை(பேர் வேண்டாமே)வாங்கி சாப்பிட்டேன்.அங்க போயி சேர்ற வரைக்கும் பிரச்சனை ஒண்ணும் இருக்கலை.நல்ல வெயில் காலம் வேற..அங்க போனவுடனே இளநி வாங்கி எல்லாரும் குடிக்க நா வேண்டானு சொல்ல..கட்டாயபடுத்தி குடிக்கவெச்சாங்க.விதி விடாது போல இருக்கு.தலை சுத்தல் ஆரம்பிச்சிருச்சு.அந்த கோவிலை அரை மயக்கத்திலே தான் பார்க்கமுடிஞ்சது.

திரும்பவும் மைசூர்..இனியும் சில இடங்க பார்க்கவேண்டியது இருந்துச்சு.சரினு கிளம்பியாச்சு..அப்ப பாத்து குடிச்ச தண்ணியெல்லாம் நெஞ்ச வரைக்கும் வந்து நிக்குது...வரட்டுமா வேண்டாமானு...அடிக்கடி வந்து படுத்திட்டு தான் போச்சு.சுத்தி பார்க்க போன இடத்திலெல்லாம் நா மட்டும் கார்லேயே தான் இருந்தேன்..போகத்தான் முடியுமா?சரினு கிளம்பி வீட்டுக்கு வர்ற வழியில் ச்சன்பட்டனா னு ஒரு ஊரு..அங்க மர சாமான்கள் ரொம்ப பிரபலம்..அண்ணி மகளுக்காக விளையாட்டு குதிரை வண்டி வாங்கியே ஆகணும்னு வாங்கி அதையும் சீட்டுக்கு நடுவில் வெச்சுட்டு வீட்டுக்கு வரதுக்குள்ளே டிஹைரேஷன் ஆகி ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் எடுக்கவேண்டியதாயிருந்தது.

ஆசை ஆசையா கிளம்பிபோயி நொந்து நூலாகி வந்தது தான் மிச்சம்..இப்ப டிரிப்பை பத்தி யாராவது பேசினா மைசூர் தான் ஞாபகத்துக்கு வருது.

Monday, August 31, 2009

மேக்கேதாட்

மேக்கேதாட் அப்படினா ஆடு தாண்டுச்சுனு அர்த்தம்.வருஷங்களுக்கு முன்னால் இக்கரை பாறையிலிருந்து அக்கரை பாறைக்கு ஆடு தாண்டி போகுமாம்.பெங்களூரில் இருந்து 98 கிலோமீட்டர் தூரத்தில் கனக்புரா அப்படிங்கற ஊரில் இருக்கு.இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் இருக்கு அது காவேரி,அர்க்காவதிங்கற இரண்டு நதிகளின் சங்கமம்.

என்னோட அண்ணிக்கு ஊரைவிட்டு வெளியே யாரும் இல்லாத இடத்தில் போய் லன்ச் சாப்பிடனும்னு ஆசை.எங்க போறதுனு யோசிச்சப்ப இந்த இடம் ஞாபகம் வந்து கிளம்பிட்டோம்.எந்த முன்னேற்பாடும் இல்லாம போனதால நல்லாவே என்ஜாய் பண்ணமுடிஞ்சது.

காலையில பதினோரு மணிவாக்கில வீட்டை விட்டு கிளம்பினோம்.போற வழியில் சாப்பாடு பார்சல் பண்ணி வாங்கிட்டோம். ஒரு மணிக்கு சங்கமத்துக்கு போய் சேர்ந்தோம்..ஆனா காரை விட்டு வெளியே வரவேண்டியிருக்கலை.எங்க பார்த்தாலும் ஒரே ஆண் தலைக தான் தெரிஞ்சுது அது கூட பாட்டில்கள் சங்கமமா இருந்தது.அப்படியே காரை யூ டர்ன் பண்ணிட்டோம்.






மேலே இருக்கற படங்கள் சங்கமத்துக்கு போற வழியில எடுத்தது.இந்த இடங்களை நேரில் பார்க்கும் பொழுது அழகோ அழகு.திரும்பி வர்ற வழியில் சாப்பாடும் ஆச்சு.

அங்கிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் தான் மேக்கேதாட் இருக்கு.இனி அடுத்தது அங்க போய் பார்க்கலாம்னு கிளம்பிட்டோம்.போற வழியில் இரண்டு பக்கமும் அழகான மலைகள்,ஆடு,மாடு,தோட்டம்..சின்ன சின்ன வீடுகள் எல்லா வீடும் ஒரே கலர் பெயிண்ட்.விட்டு வர மனசே இருக்கலை.சங்கமம் மாதிரி தான் இங்கயும் இருக்குமோ கலக்கமா இருந்துச்சு..ஆனா பராவாயில்லை ஓரளவு நல்லாவே இருந்துச்சு.ஆறும் அவ்வளவு அமைதியா இருந்தது.

அங்க வந்தவங்க எல்லாரும் அக்கரைக்கு போறதை பார்த்துட்டு நாங்களும் பரிசலில் போனோம். ஒரு ஆளுக்கு 40 ரூபாயாம்..பகல் கொள்ளை.



அந்த பக்கம் போயி பார்த்தா ஒண்ணுமேயில்லை.அடடா ஆளுக்கு 40 ரூபா போயிருச்சேனு நினைச்சோம்..அப்ப தான் இந்த பஸ் வந்தது..இதிலயும் தலைக்கு 40 ரூபா.பஸ்ஸை பார்க்கவே ஒரு மார்க்கமா இருந்துச்சு.



இந்த பஸ்ஸையும் நம்பி ஏறிட்டோம்..காடு மலையெல்லாம் ஏறி இறங்கி மொத்தத்தில் அடி வாங்காம இந்த பஸ்ல போறதுக்கு ஒரு திறமை இருக்கணும்னு பேசிகிட்டே போனோம்.அங்க போயி என்ன இருக்குனு பார்த்தா..அவ்வளவு அமைதியா இருந்த ஆறா இதுனு ஆச்சர்யபடவெச்சிருச்சு.அதுவும் பாறை மேல நின்னு தான் கீழே பார்க்கனும்.இதில் குடிமக்கள் பலபேரு விழுந்தும் சங்கமம் ஆயிருக்கங்களாம்.




கடைசி டிரிப் இதுதான் சொல்லி 10 பேர் போக வேண்டிய பஸ்ல 30 பேரை ஏத்தி,பஸ்ல தொங்கிட்டு தான் போனோம்.அக்கரைக்கு வந்து சேர்ந்த பொழுது இருட்டவும் ஆரம்பிச்சுது..சரி இனி கிளம்பவேண்டியது தான்னு திரும்ப வந்திட்டிருந்தோம்.அப்ப ஓரிடத்தில் மூணு யானைக நின்னதை பார்த்தோம்.அதை பார்த்த பயத்தில் நான் சத்தம் போட அதை கேட்டு எங்களை துரத்த வர காரு நூறு கிலோ மீட்டர் வேகத்திலே பறந்ததுனு சொல்ல வேண்டியதியில்லை.அவங்க போட்டோ தான் கீழே இருக்கு.



வீடு வந்த சேர்ற வரைக்கும் அதே பேச்சா இருந்தது.ஆனாலும் மனநிறைவை தந்த ஒரு டிரிப் இது.
Tamil Top Blogs

Tuesday, July 21, 2009

டிரைவிங்கும் நானும்

Tamil Top Blogs

ஊருக்கு கிளம்பும் போதே ரங்கமணியோட முதல் வேண்டுகோளே நான் டிரைவிங் கத்துக்கணும்கறது தான்.ஆனா நமக்கு தான் ரொம்ப தைரியமாச்சே அதனால அந்த பேச்சே எடுக்கலை.ஒரு நாள் அண்ணி டிரைவிங் க்ளாஸ் போகணும்னு சொல்லி என்னையும் கூப்பிட, துணைக்கு ஆள் கிடைச்சதேனு நானும் சரினு சொல்லிட்டேன்.ஸ்கூலையும் பார்த்துட்டு ரெஜிஸ்ட்டர் பண்ணிட்டு அண்ணி வேலைக்கு போறாதால எட்டு மணிக்கு முன்னாடி தான் க்ளாஸ் வேணும்னு சொன்னோம், அப்ப அவங்க சரி போன் பண்ணி சொல்றோம்னு சொல்ல நாங்களும் முன் பணத்தை கட்டிட்டு வந்துட்டோம்.

நாலு நாள் கழிச்சு போன் வந்துச்சு..தினமும் அரைமணி நேரம் வீதம் இருபது க்ளாஸூம் ஒரு மாசத்திலே லைசென்ஸூம் வாங்கி தர்றதா சொன்னாங்க.அடுத்த நாள் காலையிலே ஆறு மணிக்கு க்ளாஸூனு.அது வரைக்கும் ஒரே பரபரப்பா இருந்துச்சு.ஆல்டோ கார் தான் கேட்டிருந்தோம்..வந்துச்சு.அடுத்த மூணு நாளும் ஸ்டியரிங் பேலன்ஸூம் ஆக்சிலேட்டர் உபயோகிக்க பழகினோம் கூடவே எல். எல்லுக்கு வேண்டிய சிக்னல்ஸூம் இன்ஸ்டிரக்டர் சொல்லி குடுத்தார்.

அடுத்த வாரமே ஒரு நாள் ஆர்.டி.ஓ போயி ஆபிஸரை பார்க்க லைனில் நின்னோம்..அப்பவும் ஒரே படபடப்பு.எல்.எல்லுக்கு சிக்னல்ஸ் மட்டும் தான் கேப்பாங்களாம்.எனக்கு முன்னாடி அண்ணிதான் நின்னாங்க..டூ வீலர் ஓட்டறதால அவங்களுக்கு சிக்னல்ஸ் அத்துபடியாயிருந்தது.அண்ணிக்கு ஓ.கேயாயிடுச்சு. அடுத்தது நான்.ஒரு பொண்ணு தான் ஆபிஸர்,சிக்னல் போர்டில் கம்பல்சரி லெப்டை காமிச்சு அது ஏனு(அது என்னனு) சிக்னலு கன்னடாவில் கேட்க நா கொத்தில்லானு(தெரியாதுனு) சொல்ல அவங்களுக்கு ஒரே கடுப்பாயிடுச்சு.மறுபடியும் போர்டை காமிச்சு ஏனுல்லாம் கொத்திதையோ ஹேழினு (தெரிஞ்ச சிக்னல்ஸை சொல்லுனு) சொல்ல கடகடனு சொல்லிட்டு அவங்களை பார்த்தேன்..உடனே ஆயித்து ஓகினு (சரி போங்க) சொல்ல வெளியே வந்துட்டேன்.

எல்.எல்லும் கிடைத்தது. அப்புறம் ஒரு வாரம் க்ளச்சும்,பிரேக்கு,ஆக்ஸிலேட்டர் படாத பாடு பட்டுச்சு எங்க கிட்ட.ரெண்டாவது வாரத்திலே கியர் எப்படி மாத்தணும்னு சொல்லி கொடுக்க ஆரம்பிச்சாங்க கை வந்தா காலு வரமாட்டேங்குது, காலு வந்தா கை வரமாட்டேங்குது.. இன்ஸ்ட்ரக்டர் ரொம்ப நல்லவரு, இல்லைனா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு சொல்லி குடுக்க முடியுமா? அந்த ஒரு வாரத்திலே எப்படியோ தக்கி முக்கி ஒரளவுக்கு பழகிட்டோம்.அதுக்குள்ள வண்டிக்கு பிரச்சனையாம் ரெண்டு வாரம் ஒர்க்ஷாப்புக்கு போயிடுச்சு.பின்ன நாங்க படுத்தின பாட்டில வண்டி இருக்கறதே பெரிய விஷயம்.

கல்லை கண்டா நாயை காணோம், நாயை கண்டா கல்லை காணோம்கற மாதிரி இப்ப கார் வந்திருச்சு ஆனா இன்ஸ்டிரக்டர் வேலை விட்டு ஓடிபோயிட்டாராம்.புதுசா ஆளு வந்தவுடனே கூப்பிடறோம்னு வெயிட்டிங் லிஸ்டில போட்டுட்டாங்க.ஆனாலும் எங்க முயற்சியை நாங்க விடுமோமா..எல்.எல்லை வெச்சுகிட்டே அண்ணனோட மாருதி 800 டை ஒரு கை பார்த்துட்டு தான் இருக்கோம்.

Saturday, June 13, 2009

சின்ட்ரல்லாவும் என் மகளும்

Tamil Top Blogs
தினமும் தூங்குவதற்கு முன்னால் மகளுக்கு கதை சொல்லனும்.அதுவும் என்ன கதை சொல்லணும்கறதையும் அவளே தான் செலக்ட் பண்ணுவா...அப்படி இருக்கும் போது ஒரு நாள் சின்ட்ரெல்லா கதை சொல்லற நாளா இருந்தது.சரினு ஆரம்பிச்சேன் ஒரு ஊருல ஒரு அப்பா அம்மா அவங்களுக்கு ஒரே பெண் குழந்தை அது ரொம்பவும் அழகா இருந்ததால அதுக்கு பேரு சின்ட்ரெல்லா.

கொஞ்ச நாள் கழிச்சு அவளோட அம்மா செத்து போயிட்டாங்க அப்புறம் அவளோட அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரு,அப்பத்திலிருந்து சின்ட்ரெல்லாவுக்கு வாழ்க்கையை கஷ்ட்டமாயிடுச்சு.சரியான சாப்பாடு இல்ல நல்ல துண்மணிக இல்ல ஸ்கூலுக்கும் போகாம வீட்டு வேலையே கதினு கிடந்தா. சித்திக்கு பயந்துட்டு அப்பாவும் சப்போர்ட் பண்ணலை.

சித்தியோட பொண்ணுகளும் அவளை கொடுமைபடுத்தீனாங்க.இருந்தாலும் மனவேதனையோட எல்லா வேலைகளையும் செஞ்சு கொடுத்தா.நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவோட படத்தை எடுத்து வெச்சுகிட்டு மனசிலிருக்கறதையெல்லாம் சொல்லி அழுவா.அப்புறம் இராஜகுமாரன் வந்ததும் கடைசியில் அவளோட செருப்பை கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணினதையும் சொல்லி கதையை முடிச்சேன்.

இதை கேட்டுகிட்டிருந்த ரங்கமணி மக கிட்ட சொன்னார் நானும் சின்டரெல்லாவும் ஒரே மாதிரி சித்தி கிட்ட வளர்ந்தோம்.அதுல வர்ற மாதிரியே உங்கம்மாவும் எனக்கு ஷீ வாங்கி தந்துதான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டானு சொன்னார்.ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சா..அடுத்த நொடியே அவங்கப்பாவை பார்த்து, சித்தப்பாவை பாரு இண்டிகா காரை வாங்கிட்டு தானே சித்தியை கல்யாணம் பண்ணிகிட்டாரு..உனக்கு புத்தியே இல்லை இல்லைனா ஒரு ஷீக்காக இந்த அம்மாவை கல்யாணம் பண்ணியிருப்பியானு?? கேட்டா பாருங்க.எங்களுக்கு வாய் அடைச்சுபோச்சு.

அதுக்கப்புறம் அவளுக்கு (அம்மா இல்லாத)அப்பா கிட்டே ரொம்ப பிரியமும் மரியாதையும் கூடிடுச்சு.

Friday, June 5, 2009

முதல் தொடர்!!!!!

Tamil Top Blogs

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் தந்த லதானந்த் சாருக்கு நன்றி.


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அது எனக்கு தெரியாது ஆனா என்னோட சின்ன மாமா வெச்ச பேரு.எனக்கு பிடிக்காத பேர் தான், வெச்சிட்டாங்களே.....போகட்டும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

இன்னைக்கு கூட தான் அழுதேன்.அவர் கோபப்பட்டாலே வந்துருது.அப்பா நினைவு வரும் போதும் அழுகையும் வந்திடும்.


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஸ்கூலில் படிக்கும் போது பிடிச்சுது. இப்ப கையெழுத்து போட, பொண்ணுக்கு வீட்டு பாடம் எழுத மட்டும். பொண்ணு திட்டுவா இப்படிதான் எழுதறதானு.

4. பிடித்த மதிய உணவு என்ன?

ரசம் கலந்த தயிர் சாதம் with கோபிமஞ்சூரியன், சிக்கன் வறுவல்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமா. ஆனா மெயின்டெய்ன் பண்ண தான் ஒரே பாடா கிடக்கு.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவி தான் முதல் சாய்ஸ்.2002 ல் குற்றாலத்துக்கு போனது..அதுக்கப்புறம் இது வரைக்கும் அருவி குளியல் கிடைக்கலை.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

எல்லாமே தான். வீட்ல ஸ்கேனர்னு பேரு கூட இருக்கு.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

புடிச்ச விஷயம்
பிடிவாதம், பாரபட்சம் முடிஞ்சளவு காட்டாம இருக்கறது.

புடிக்காத விஷயம்
பர்பெக்ஷனை எதிர்பார்க்கறது.


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

புடிச்ச விசயம் எனக்கு தேவையான சுதந்திரம் குடுக்கறது.

புடிக்காத விசயம். சோம்பேறிதனத்தை.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என்னுடைய காணாம போன நண்பர்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

பர்ப்பிள் வித் பேபி பிங்க்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கார்ட்டூன் சேனல் சத்தம் கேக்குது.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ஊதா

14. பிடித்த மணம்?

மகிழம் பூ

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

யாராவது உதவி பண்ணுங்களேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

விலங்குகளை பத்தி வர்ற எல்லா பதிவும்.

17. பிடித்த விளையாட்டு?

கம்யூட்டரில் சாலிட்டர், நிஜத்தில் ஸ்னோ பவுலிங்.

18. கண்ணாடி அணிபவரா?

இப்போதைக்கு இல்லை.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

புரியாத கதைகள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

பொம்மலாட்டம்.

21. பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

மகளின் பாட புத்தகம் தான்.
23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

எப்பாவது போர் அடிக்கும் போது.


24. பிடித்த சத்தம் ?

விடிகாலை குயிலின் சங்கீதம்.

பிடிக்காத சத்தம்?

அதீத இரைச்சல் எதுவாக இருந்தாலும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

துபாய்.


26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சம் இருக்கு, அது பிரிடிக்ஷன்..இப்ப தான் குடும்பத்துக்குள்ளேயே நம்ம ஆரம்பிச்சிருக்காங்க.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

துரோகிகளை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்கோபம்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஆஸ்திரேலியா. இப்ப டீச்சர் இருக்கற ஊரும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நானாகவே.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

ஷாப்பிங்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடு.

Tuesday, May 12, 2009

புது வருஷமும் விரதமும்

ரொம்ப நாளா 2009 புது வருஷம் கொண்டாடினதை எழுதனும்னு நினைச்சு இன்னைக்கு தான் நேரம் அமைஞ்சிருக்கு.

டிசம்பர் மூணாவது வாரத்திலேயே எப்படி கொண்டாடறதுனு முடிவாயிடுச்சு.ஷார்ஜாவில் உள்ள சொந்தக்கார குடும்பங்கள் புதன் கிழமையே துபாய் வந்து வியாழன் புது வருஷத்தன்னைக்கு அபுதாபி போகலாம்னு.வியாழக்கிழமை மட்டும் தான் நமக்கு சைவம்,புது வருஷம் அன்னைக்கு தான் வரணுமா?

நாம தான் ஒரு நாள் மட்டும் சைவம்னா மிச்சவங்க எப்பவுமே சுத்த அசைவம்.புதன் கிழமையே எங்களுக்கு கொஞ்சம் புளியோதரையும்,எழமிச்சை சாதமும் மத்தவங்களுக்கு மட்டனையும் சிக்கனையும் வறுவல் பண்ணிட்டேன்.எல்லாம் தயார் பண்ணி நாங்களும் தயாராகி ரெண்டு காரில் அபுதாபிக்கு புறப்பட்டாச்சு.

அங்க நாலு குடும்பங்கள் இருக்கு..எல்லாரும் சேர்ந்து லூலூ ஐலேண்ட் போயி கடலில் போட்டிங், விளையாட்டு, குளியல்னு பிளான் பண்ணி போனோம்.அவங்களையும் சந்திச்சு வாழ்த்துக்களையும் பரிமாறிகிட்டு ரங்கமணிகங்க எல்லாம் ஐலேண்ட் போறதுக்கு டிக்கெட் வாங்க போனா ஒரு ஈ காக்கா கூட அங்க இல்லை.ஒரே ஏமாற்றம், இனி எங்க போறதுனு குழப்பம் வேற.கடைசியில் அபுதாபி ஏர்போர்ட் பார்க் போகலாம்னு முடிவு பண்ணி ஆறு காரில் கிளம்பினோம்.



பார்க்குகுள்ளே போயி நல்லா இடமா பார்த்து கொண்டு வந்த பொருளையெல்லாம் எடுத்து வெச்சோம்.அதில் மூணு குடும்பம் பார்பிக்யூ பண்ண சிக்கனை மசாலாவில் கலந்து எடுத்து வந்திருந்தாங்க. அதனுடைய படங்கள் கீழே.சிக்கனுடன் சாப்பிட அரபிக் ரொட்டியும், பூண்டு பேஸ்ட்டும், சன்னா (ஹம்மூஸ்)பேஸ்ட்டும் இருந்தது.நாம சாப்பிடாத போது தான் எல்லாரும் விதவிதமா சமைப்பாங்க போலிருக்கு.





கிரிக்கெட்,அந்தாக்க்ஷரி,கண்கட்டு விளையாட்டு எல்லாம் முடிச்சிட்டு சாப்பிடலாம்னு உட்கார்ந்தா புளியோதரையும் எழமிச்சை சாதமும் ஐஸ் மாதிரியாயிடுச்சு..அப்புறம் எங்க சாப்பிடறது??? பசி தாங்கமுடியலை அதோட அவங்க கிண்டல் வேற, என்ன பண்றது அவங்க சாப்பிடறதை வேடிக்கை மட்டும் பார்த்தோம்.ஏழு மணி வரைக்கும் இருந்துட்டு அவவங்க வீட்டுக்கு கிளம்பினோம். போற வழியில் ச்சீஸ் ரோல் வாங்கி சாப்பிட்டுட்டு பசியை கொஞ்சம் ஆத்தினோம்.

இப்படி பசியோட கொண்டாடின முதல் நியூ இயர் இது தான்.வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற மாலில் மெக்சிகன் டேன்ஸையும் பார்த்துட்டு நியூ இயர் கொண்டாட்டத்தை முடிச்சோம்.


Tamil Top Blogs

Wednesday, April 1, 2009

பிரிவில் ஒரு ஒற்றுமை






Tamil Top Blogs

எவ்வளவு ஒற்றுமை பார்த்தீங்களா!!! பெரியவ தான் டாம் எங்க வீட்டு இளவரசி,சின்னவ ஜெரி சின்ன அண்ணன் வீட்டு இளவரசி.இங்க குறும்பு பண்றதும்,ஜெயிக்கறதும் அவளே தான்.

ரெண்டு பேருக்கும் ஒண்ணரை வயசு வித்தியாசம்.ஆனாலும் சின்னவ தான் எப்பவும் அக்கா,சந்திக்கற ஒவ்வொரு முறையும் அன்பால நனைச்சுக்குவாங்க..எல்லாம் அரைமணி வாக்குல முடிஞ்சிடும்.அப்புறமென்ன நல்லா குடுமிபுடி சண்டை நடக்கும்.கூடவே சொந்தபந்தங்களையும்,வீட்டு பொருளையும் அவங்களுக்கு தகுந்த மாதிரி பங்கு போட்டுக்குவாங்க.

எப்பவும் இணை பிரிக்காம இருக்கறது டிரெஸிம்,விளையாட்டு பொருட்கள் தான்.அந்த விஷயத்தில் மட்டும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுகொடுக்கவே மாட்டாங்க.அதுவும் இவங்க ரெண்டு பேருக்கும் பிடித்த மாதிரி எடுக்கறதுகுள்ள எங்களுக்கெல்லாம் பைத்தியம் மட்டும் தான் புடிக்காது.சொந்தபந்தங்களுக்கெல்லாம் அன்பான வேண்டுகோள் கொடுத்துட்டோம்..எந்த பரிசு பொருளா இருந்தாலும் ஒரே மாதிரி ரெண்டு கொண்டுவரணும்னு.

இப்ப ஒருத்தரை ஒருத்தர் ரொம்பவே மிஸ் பண்றாங்க..ஆனாலும் டிரெஸிம்,விளையாட்டு பொருளும் இப்பவும் ஒரே மாதிரி தான்.

Thursday, March 26, 2009

மழை நாளில் தயிர் சாதம் with ப்ரூ காபி


நேற்று இரவு துபாயில் ஆலங்கட்டி மழை...கண் கொள்ளா காட்சியா இருந்தது.கோடை கால தொடக்கம் இங்கே, ஆனாலும் கடந்த இரண்டு நாளா மேகமூட்டத்துடன் சூட்டை தனித்துக்கொண்டிருக்கிறது.மழை என் நினைவுகளை கொஞ்சம் பின்னாடி கொண்டுபோயிடுச்சு.

சின்ன வயசில் மழை பெய்யும் பொழுது யார் வீட்டில் விளையாடிட்டு இருந்தாலும் உடனே எங்க வீட்டுக்கு ஓடி வந்திடுவேன்.சின்னதா ஒரு தாழ்வாரம் எங்க வீட்டில் இருந்துச்சு அங்க மழை தண்ணி புடிக்கறதுக்காக அண்டா,குண்டா, தவலைனு(பாத்திரங்களோட பேரு) வெச்சிருப்பாங்க.மழையில நனைஞ்சிட்டே இந்த பாத்திரங்களோட விளையாடுறது ரொம்ப பிடிக்கும்.

அப்பவெல்லாம் மழைதண்ணி தங்கத்துக்கு சமம்..ஏன்னா குடிக்கறதுக்கு மட்டும் நல்ல தண்ணி கிடைக்கற ஊர் அது. அதுல மழை தண்ணில துணி துவைச்சா நல்லா அழுக்கு போகும்கறதால..தண்ணியை சிமெண்ட் தொட்டில ரெண்டோ மூணோ மாசத்துக்கு பத்திரமா வெச்சிருப்பாங்க.அந்த தண்ணியை வெளையாடுறதுக்கு எடுத்துட்டோம்னா அவ்வளவு தான்...எது அம்மா கையில கிடைக்குதோ அன்னைக்கு அதுல தான் பூஜை.

பத்தாவது படிக்கும் போது மறுபடியும் வீடு மாறிட்டோம்.இந்த வீட்டை சுத்தி ரெண்டாள் உயரத்துக்கு காம்பவுண்டு சுவர்.எப்பவும் கோட்டைக்குள்ளே இருக்கற மாதிரி ஒரு பீலிங்.இந்த வீட்டுக்கு பாட்டி வீட்டிலிருந்த அக்காவும் வந்துட்டா.பக்கத்திலேயே நூலகம் இருந்ததால தினம் தினம் புத்தகம் எடுத்துட்டு வருவேன்.தூங்கற நேரம் தவிர எல்லா நேரமும் புத்தகம் படிச்சிட்டே இருப்பேன்..ஆனா பள்ளி பாடங்களை படிக்கற கெட்டபழக்கம் மட்டும் இருக்கலை.

மழை மாதிரியே ரொம்பவும் பிடிச்சது தயிரும்,ப்ரூ காபியும்.அம்மா அடிக்கடி திட்டிகிட்டே இருப்பாங்க... இவ குடிக்கற காபிக்கும்,சாப்பிடற தயிருக்கும் பத்து எருமை இருக்கிற வீட்டில தான் கட்டிக்கொடுக்கணும்னு.இதை கேட்டுட்டிருந்த அக்கா சொன்னா..இவளை பார்த்தவுடனே பத்து எருமையும் ஓடிப்போயிரும்னு...அந்தளவு என்னோட ஒன்றிபோயிருந்தது.

இந்த வீட்டிலும் அக்காவோட மழையில் ஒரே கொண்டாட்டம் தான்.மழை வந்தா அன்னைக்கு கண்டிப்பா ராத்திரியில் கரண்ட்டும் இருக்காது கொசுக்கடியால் தூக்கமும் வராது.அப்ப நேரம் போகணும்னு லாந்தர்(விளக்கு)பொருத்தி வெச்சுகிட்டு கதை புத்தகம் படிச்சிட்டு இருப்பேன்.இப்படியே விடிகாலை ரெண்டோ மூணோ மணியாயிடும்..நல்லா பசியெடுக்கும்,நேரா சமையல் ரூமுக்கு போயி நானே காபி தயார் பண்ணிட்டு அதோட சாப்பாட்டில் தயிரையும் ரசத்தையும் ஒண்ணா கலந்து எடுத்துட்டு வந்து..அப்புறம் என்ன ஒரு வாய் சாதம் ஒரு வாய் காபினு அஞ்சு மணி வரைக்கும் ஓடும்.

இதை சாப்பிட்டு முடிக்கறதுகுள்ள தூக்கம் கண்ணை அசத்தும்.அப்படியே தூங்கிட்டு எட்டு மணிக்கு அரக்க பரக்க எழுந்திருச்சு ஸ்கூலுக்கு ஓடுவேன்.இப்படி எத்தனையோ நாள்,வருஷங்கள் என் கூட இந்த மூணும் இருந்தது.இப்ப என்னால இப்படி ஒரு காம்பினெஷனில் சாப்பிடமுடியுமானு தெரியலை.இப்ப கொழுப்புசத்து நீக்கப்பட்ட பாலும் தயிருனு ஆயிடுச்சு. இப்ப எப்பவாவது ஹோட்டலில் மட்டும்னு தான் காபினு ஆயிடுச்சு.

எதேச்சையா நேத்து ஹோட்டலிருந்து வந்த பார்சலில் ஒரு கப் காபியும் இருந்தது.மழையை ரசிச்சுகிட்டே காபியும் குடிச்சேன். தயிர் சாதம் மட்டும் துணைக்கு இல்லை.இப்பவும் மாறாம இருக்கறது மழை பெய்யும்போது வீட்டில் இருக்கணும்னு நினைக்கறது.

Sunday, March 8, 2009

மகளிர் தினம்

எனக்கு தெரிந்து ஒரே ஒரு தடவை தான் மகளிர் தினத்தை கொண்டாடினேன்.அது பெங்களூரில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியின் ஒரு யூனிட்டில் வேலை செய்தபொழுது.
நமக்கு வேலையே ரிப்போர்ட்ஸ் ரெடி பண்ணறது தான்..அதுவும் காலையில் மட்டும் தான் வேலை இருக்கும் அதுக்கப்புறம் போன் பண்றது,வர்ற போனுக்கு பதில சொல்லறது,அப்படியே ஹெச்.ஆரில் கொஞ்சம் வேலை அதுகூட இன்டஸ்டிரியல் இஞ்ஜினியரும்,பினிஸ்சிங் யூனிட் க்யூ.சி (பொண்ணுக)கூட மிச்ச பொழுது ஓட்டறதுனு இருந்த போது தான் ஒரு நா சோஷியல் வெல்பேரில் இருந்து கொஞ்ச பேரு வந்து மீட்டிங் போட்டாங்க.


புதுசு புதுசா நிறைய திட்டங்களை சொன்னாங்க.அதுல ஒண்ணு தான் மகளிர் தின கொண்டாட்டம்.செலவு எல்லாம் யூனிட்டே செய்யனும்னு சொல்லிட்டாங்க.நாங்க தான் முப்பெரும் தேவியர் இருக்கோமே,பொறுபெல்லாம் எங்ககிட்ட.அப்புறம் கேக்கவாவேணும்? முதல் வேலையா பண வசூலை ஆரம்பிச்சோம் அதுல சிக்கல் என்னன்னா ஆம்பிளைக யாரும் பண உதவி செய்ய தயாரா இல்லை..எல்லார்கிட்டேயும் ஒரே பதில்....மகளிர் கொண்டாட்டத்துக்கு நாங்க எதுக்கு கொடுக்கணும்னு.ஆனாலும் விடாமுயற்சி பண்ணி ஓரளவு வசூல் பண்ணிட்டோம்.

நம்மளை நம்பி கொடுத்த பொறுப்பை நல்லா செய்யணுமேனு டென்சன் வேற.என்ன பண்றதுனு யோசிச்சு மியூசிக்கல் சேர்,பானை உடைக்கறது,கயிறு இழுக்கறது மற்றும் ஓட்டபந்தயம் வெக்கலாமனு முடிவு பண்ணினோம்.ஆனா பங்கெடுக்க லேடீஸை கொண்டுவர ஒவ்வொரு தடவையும் இன்சார்ஜூக கிட்ட அனுமதி வாங்கணும்,அதுக்கு அவங்க பண்ணின பிகு கொஞ்ச நஞ்சமல்ல.போட்டிகளில் ஜெயிக்கறவங்களுக்கு பரிசு வேற கொடுக்கணும்.

மகளிர் தினத்தன்னைக்கு காலையில எல்லா பெண்களுக்கும் பூ கொடுக்கணும்,யூனிட் பூராவும் கலர் பேப்பர் ஒட்டி,வெல்கம் ஃபோர்டு ஒண்ணையும் வெக்கணும் அதுகூட ஸ்வீட் எல்லாருக்கும் கொடுக்கணும், தலைமை தாங்க வரவுங்களுக்கு பூகொத்து வாங்கணும்னு முடிவு பண்ணினோம்.ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸான மாதிரி இருந்துச்சு.வேற என்ன டேன்ஸ் தான்.

பாட்டை முடிவு பண்ணி பிராக்டீஸிம் ஆரம்பிச்சாச்சு. ஒரு சோலோவும், எட்டு பேரோட ஒரு க்ரூப்பும் செலக்ட் பண்ணினோம்.அப்பவும் இன்சார்ஜீக டார்கெட் டார்கெட்டுனு பொலம்பிகிட்டே இருந்தாங்க.எப்படியோ விழா முடிஞ்சா போதும்னு ஆயிருச்சு.மகளிர் தினமும் வந்தச்சு, சாயங்காலமா விழாவுக்கு முக்கிய விருந்தாளியா கம்பெனியோட முதலாளி அம்மா(இத்தாலியர்)வந்திருந்தாங்க.மகளிர் தினத்தை பத்தி கன்னடாவில் கொஞ்சம் பேசீனாங்க.

நடனம் பாட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு பரிசளிப்பு நடந்தது.அதுக்கப்புறம் எல்லாருக்கும் இனிப்பை வழங்கினோம்.பிறகு ஒரு நாள் ஜி.எம். ஹெச்.ஆர் வந்து எங்களையெல்லாம் ரொம்பவே பாராட்டினார்.எல்லா யூனிட்டை விட எங்க யூனிட்டில் தான் நிகழ்ச்சியெல்லாம் சிறப்பா இருந்ததும்னு சொன்னார்.எங்க மேனேஜருக்கு ஒரே பெருமை...பின்ன இருக்காதா இந்த நிகழ்ச்சிக்கு ஒத்த பைசா கூட குடுக்காம, வாங்கி வெச்ச இனிப்பில் ஒரு கிலோ எடுத்துட்டு போனதுமில்லாம முதலாளிகிட்டே நல்ல பேர் கிடைச்சதும்.

மகளிர் தின வாழ்த்துக்கள்.

Tuesday, February 17, 2009

Chain Mails to All

கடந்த கொஞ்ச நாளா இந்த மாதிரி வர்ற மின்னஞ்சல் பார்த்தாலே பயமா இருக்கு...இது அனேகமா எல்லாருக்கும் இருக்கும்னு நினைக்கிறேன்.

அதுவும் இந்த மாதிரி உலகமே பணவீழ்ச்சியால் நொடிச்சு, யாருக்கு எப்ப(வேலை)சீட்டு கிழியப்போகுதோனு கலக்கத்தில் இருக்கும் போது இந்த மாதிரி மின்னஞ்சல் வேற வந்து பயமுறுத்துது.அதுகூட 7லிருந்து 21பேர் வரைக்கும் அதை பார்ஃவேடு பண்ணனும்னு கண்டிஷன் வேற.இதை அனுப்பறதே நெருங்கிய வட்டங்கள் தான்.

இதை யாருப்பா கண்டுபிடிச்சது? இதை அனுப்பலைனா வேலை போயிரும்,குடும்பமே கஷ்டப்படும் அப்புறம் குடும்பத்தையே இழந்துருவீங்கனு சொல்லி வருது சாராம்சம். கடவுள் கூட மாடர்ன் டெக்னாலஜிக்கு மாறி அவரை நினைக்க வைக்க கேன்வாஷ் பண்றாரா?


கடவுளை எல்லாத்துக்கும் மேலான சக்தியாகவும்,பிரபஞ்சமே அவரோட இயக்கத்தில் இருக்கிறதாகவும்,தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்னு நம்புகிற நாம்,வீட்டில் செய்யற பூஜையில் இருந்து பெரிய அளவு வேண்டுதல் வரைக்கும் அவர் நமக்கு எல்லா நன்மைகளையும் தந்து தீயதில் இருந்து காப்பாத்துவாருனு தானே செய்யறோம்.அப்படி இருக்கும் போது இந்த மாதிரி வர்ற மெயிலை அடுத்தவங்களுக்கு அனுப்பலைனு தண்டிப்பாரா?

இந்த மாதிரி மெயில்களை பார்க்கும் பொழுது, எனக்கு ஒரு கண் போனா உனக்கு ரெண்டு கண் போகட்டும்கிற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது.இப்ப இருக்கிற நிலைமையில்,நாளைய பொழுது வேலை இருக்குமா இருக்காதா குடும்பத்தை எப்படி கரைசேர்க்கறதுனு ஆயிரம் கவலைகளோடு இருக்கும் போது இந்த மாதிரி மெயிலை அனுப்பி தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறீங்க?

இப்ப தேவை பயமுறுத்தல்கள் அல்ல. தன்னம்பிக்கை தரக்கூடிய உரைகள்,நட்பு கொடுக்கும் தைரியம், அரவணைக்கும் பண்பு, நான் என்றது போய் நாம் என்கிற ஒருங்கிணைப்பு இதெல்லாம் இருந்தாலே கடவுள் உன்னருகில் இருக்கிறார் என்று பொருள்.


தயவுசெய்து இந்த மாதிரி மெயில்களை பார்த்தாலே அழிச்சுடுங்க இல்லைனா சுற்றமும் நட்பும் அவங்க மனசில் இருந்து உங்களை அழிச்சுடுவாங்க.

Friday, February 6, 2009

பத்தாவது ஆண்டு விழா

அது என்ன பத்தாவது ஆண்டுனு தானே நினைக்கறீங்க...வேற ஒண்ணும் இல்லைங்க எங்க பொண்ணு படிக்கற நடனபள்ளியோட ஆண்டு விழா.ஜனவரி 30ம் தேதி இங்க இருக்கிற ஒரு ஸ்கூலில் வெச்சு எல்லா வித கலைநிகழ்ச்சிகளோட பிரமாதமா நடத்தினாங்க.

சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.








2009 ஜனவரியின் முதல் வாரத்தில் டேன்ஸ் ஸ்கூலில் மீட்டிங் போட்டு கமிட்டி மெம்பர்சையெல்லாம் செலக்ட் பண்ணினாங்க..போனா போகுதுனு என்னையும் சேர்த்திகிட்டாங்க.அதுக்கப்புறம் இந்த வருஷம் அம்மாக்களுடைய டேன்ஸ்சை அறிமுகப்படுத்தனும்னு முடிவு பண்ணி எட்டு(நானும் கூட) பேரை தேர்ந்தெடுத்தாங்க.

எங்களோட ரிகர்சல் நல்லா நடந்ததோ இல்லையோ அரட்டையில் இருந்து குடும்பம் வரைக்கும் கச்சேரி நல்லா நடந்தது.ஒரு மாதமா தினமும் மூணு மணி நேரம் பிராக்டீஸ் இருந்தது.இதுக்கு மேல போன் வேற பண்ணி ஒரே டிஸ்கஷன் தான்.இந்த மாசம் வந்த போன் பில்லால் எட்டு வீட்டு ரங்குஸ்கள் மயக்கம் போடாத குறையா சுத்தறாங்க.

ஒரு மாசம் ஆட்டம் பாட்டுமா நேரம் போனதே தெரியலை.பதினைஞ்சு வருஷத்துக்கு பின்னாடி போன மாதிரி இருக்கு.புதிய நட்புக்கள் கிடைச்சிருக்கு. ரங்கமணிகளுக்கு ரொம்பவே பெரிய மனசுக தான் எங்களுக்காக ஒரு மாசமா அலைஞ்சதும் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததும் பங்கெடுக்கவச்சதும்.