Monday, January 12, 2009

விசித்தர தாத்தா- பாகம் 6

தாத்தாவுக்கு சண்டை மட்டும் இல்ல அது கூட சங்கீதம்,ஜோஸியம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை, கவிதைனு தெரிஞ்சது ஏராளாமா இருந்தது.அப்பாவுக்கும் ஜோஸியத்தில் நம்பிக்கையும் ஓரளவு பார்க்கவும் தெரிஞ்சதால தாத்தாகூட சேர்ந்து அப்பப்ப வீட்டில் ஜாதகம் பார்ப்பாங்க.அதுல அப்பாவை பத்தி சொன்ன ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துச்சு.அதே மாதிரி தான் தாத்தாவை பத்தி அவரே பலன் சொன்னதும்.

தாத்தாவை பார்க்கறதுக்கு பேரன் கூட பேத்திகளும் இந்த தடவை வந்திருந்தாங்க.இந்த தடவை பேத்திகளை பார்த்து அதிசயமா கோபப்படலை. பேத்திக வீட்டை சுத்தம் பண்றதும் சமையல் பண்றதுமா ஒரே கலகலப்பா இருந்துச்சு தாத்தா வீடு.அப்படி சுத்தம் பண்ணும் போது(கூட நானும்) ஒரு சுருக்கு பை கிடைச்சுது,அதுக்குள்ள நிறைய நவரத்தின(ஸ்ரீலங்காவில் இருந்து கொண்டு வந்த) கல்லுக இருந்துச்சு.பேத்திக ஆன மட்டும் கெஞ்சி பார்த்தாங்க அந்த கல்லில் கொஞ்சம் தரச்சொல்லி ம்கூம் தாத்தாவாவது கொடுக்கறதாவது.போனா போகுதுனு ரெண்டு பேருக்கும் வெள்ளி கொலுசு மட்டும் வாங்கி கொடுத்தார்.அதுக்குபிறகு பேத்திக வரவேயில்லை.

ரொம்ப வருஷத்தக்கு பிறகு தாத்தா தன்னோட ரெண்டாவது மகனை பார்க்க மயிலாடுறைக்கு போறதாகவும் மகன்கூட ஒரு மாசம் இருந்துட்டு தான் வருவேன்னு சொல்லிட்டு போனார்.ஆனா போன பத்து நாளிலே முக வாட்டத்தோட திரும்ப வந்திட்டார். எங்க வீட்டுக்கு வந்து மகனும் மறுமகளும் சரியில்லேனும்,சரியா பார்த்துகிலைனும் பொலம்பிகிட்டு இருந்தார்.எங்க கூட தாத்தாவுக்கும் அப்படியே வாழ்க்கை கொஞ்ச நாள் ஓடுச்சு.அப்படி இருந்த ஒரு நாளில் தாத்தா சாப்பிட வந்தபோது சொன்னார் என்னோட டைம் முடியப்போகுது அதுனால நான் சின்னமகன்கிட்டேயே போறேனும்,அவன்தான் காரியம் எல்லாம் செய்யனும்னு சொன்னார்.

அப்பாவும் பெரியண்ணாவும் தான் தாத்தா ஊருக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணீனாங்க.ஒரு வேன் புடிச்சு எல்லா சாமான்களையும் தாத்தாவோட மேற்பார்வையில் ஏத்தி விட்டாங்க.பிறகு அப்பாவுக்கு தெரிஞ்சவுங்க சென்னை போறதா இருந்தது அவங்க கூட காரில் தாத்தாவையும் கண்ணீரோட வழியனுப்பினோம்.அவரும் பத்திரமா போய் ஊரு போய் சேர்ந்திட்டேனு லெட்டர் அனுப்பினார்.சரியா பதினைஞ்சு நாளிலேயே தாத்தா தூக்கத்திலேயே இறந்துட்டார்னு ரெண்டு மாசம் கழிச்சு நீயுஸ் வந்துச்சு,அப்ப போய் என்னாகப் போகுதுனு யாரும் போகலை.

அப்ப தோணாம இருந்தது இப்ப தோணுது..அப்பா,அம்மா வழி தாத்தாவை பார்த்ததே இல்லை அதுக்கு தான் கடவுள் அந்த தாத்தாவை அனுப்பி இருப்பாரோ???


(முற்றும்).

Wednesday, January 7, 2009

விசித்தர தாத்தா - பாகம் 5

வி்ட்ட குறை தொட்ட குறையா தாத்தாவோட வைத்தியம் எங்க வீட்டில யாருக்காவது நடந்துட்டுதான் இருந்தது.மறுபடியும் பெரியண்ணாவுக்கு ஒரு பிரச்சனை,முகவாதம் வந்து இடது பக்கமா வாயும் இழுத்து கூடவே கண்ணும் மூட முடியாம ரொம்ப அவஸ்தைபட்டார். கோயம்பத்தூரில் ஒரு டாக்டர்கிட்ட மூணு மாசம் வைத்தியம் பார்த்தும் சரியாகலை.மறுபடியும் தாத்தாகிட்டே அடைக்கலம்.


வைத்தியத்தோட தாத்தாவுக்கு சாப்பாடும் எங்க வீட்டிலைனு ஆயிடுச்சு.அதுகூட பொதுகுழாயில் வர்ற தண்ணியை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிடிச்சு அவர் வீட்டு தொட்டியில் நிறைச்சுவக்கணும்,அப்பப்ப துணி துவைச்சுகொடுக்கணும். அதுல குறைகண்டுபிடிக்கறதே அவர் வேலை அதுக்குதகுந்த மாதிரி அவரை கடுப்பேத்தரதே என் வேலையாகவும் இருந்துச்சு.


அண்ணாவோட முகம் சரியாய்டுச்சு,ஆனா அதற்கு பிறகும் தாத்தா நேரா நேரத்துக்கு சாப்பிட வரமாட்டார்,வந்தாலும் எல்லா சூடா இருக்கணும் இல்லைனா அம்மாவுக்கு திட்டு.அப்பா வியாபாரியா இருந்ததால விடிகாலையில் போய்ட்டு மத்தியானம் தான் வருவார் வந்தவுடன் சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கணும் அந்த நேரம் பார்த்து தான் தாத்தா ரேடியோவை சத்தமா வைப்பார்.இதுனால தினமும் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை நடக்கும் ஆனா பேசாம மட்டும் இருக்கலை.

இப்படி இருக்கும் போது என்னோட சின்ன அண்ணா ஊரில் இருந்து வந்திருந்தான்.அவனும் நானும் சேர்ந்து ஒரு நாள் தாத்தா வீட்டுக்குள் போனோம்,ஆனா அவர் எங்களை தொரத்திரதிலேயே குறியா இருந்தார் சரி இன்னொரு தடவை பார்த்துக்கலாம்னு வந்திட்டோம்.
அதுக்கு தகுந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சுது அது என்னன்னா அவரு மருந்து அரைக்கறதுக்கு வித விதமா கல்லு வெச்சிருந்தார அதில ஒண்ணை காணலை அதை தேடித்தரதுக்கு நானும் சின்னன்னாவும் போனோம்.


நாங்க கல்லை தேடறதும் அவர் எங்க பின்னாடியே இருந்தார்(அவ்வளவு நம்பிக்கை).கல்லு கிடைச்சவுடன் கெட்அவுட்.அப்படி இருக்கும் ஒரு நாள் அவரோட ரின் சோப்பும்,கரண்டியும் காணாம போச்சு. போலீஸை கூப்பிடுறேனு ஒரே கூச்சல். வீதி ஜனங்க மறுபடியும் ஆஜர்.இது நடந்த கொஞ்ச நாளில்(ஓடிப்போன மகனோட மகன்) பேரன் மறுபடியும் வந்தார்,கோயம்பத்தூரில் பி.எஸ்.ஜி (மெரிட்டில்)காலேஜில் சேர்ந்துட்டதாகவும் தாத்தாவை பார்க்க வந்ததாகவும் சொன்னார்.ஆனா தாத்தா மட்டும் வீட்டுக்குள்ளே விடலை.வேற வழி? எங்க வீடு தான் இருக்கே.அதுக்குபிறகு நிறைய தடவை அவரோட பேரன் வந்திருந்தார் அப்பவெல்லாம் புட் அண்டு அகாமடேஷன் எங்க வீட்டில் தான்.

(வாரேன்)....

Sunday, January 4, 2009

விசித்தர தாத்தா - பாகம் 4

எல்லாரும் ஆஆனு சொல்ற மாதிரி தாத்தா கையில் ஏதோ சுருட்டி வச்சிருந்ததை குடி வந்த வீட்டுக்குள் கொண்டு போய் சோபாவில் விரித்தார்.அது என்னனா மான் தோல் (இப்போவாவிருந்தா போலீஸ் ஸ்டேஷன்ல இருந்திருப்பார்)அதிலே படுத்தா தான் தூக்கம் வருமாம் அவருக்கு.அன்னைக்கு அந்த ஏரியாவுக்கே அது தான் ஹாட் டாபிக்.


ஊர் ரொம்ப சின்னதாகவும்,தாத்தாவோட வீட்டு சாமான்கள் குறைவா இருந்ததாலயும்(எண்பதுகளில் ஆட்டோ,ஷேர் ஆட்டோ மற்றும் கேரியர் ஆட்டோ எதுவும் இந்த ஊரில் வந்திருக்கலை)ஒரு கைவண்டியில்(மாடு இருந்தால் மாட்டு வண்டி)நிறைய மூலிகைகளும்,ஒரு பம்ப் ஸ்டவ் மற்றும் ஒரு சாக்கில் சமையல் பாத்திரங்களும் அதுகூட ஒரு ரெக்ஷின் சோபாவும் வந்துச்சு.அது எல்லாம் அடுக்கி கொடுக்கறதுக்குள்ளே எங்க பெண்டு கழன்டுறுச்சு.


வந்த புசுதுல தானே சமைச்சு சாப்பிட்டிருந்தார்.இந்த வீட்டுக்கு வந்த பிறகு தாத்தா செஞ்ச முதல் வேலை பெரியண்ணாவை(தாத்தாவை சைக்கிளில் பிக்அப்,டிராப் பண்ணிடிருந்தார்) தவிர எங்களை யாரையும் வீட்டுக்குள்ளே விடாம இருந்ததது தான்.அக்கம்பக்கம் எல்லாம் தாத்தாகிட்டே வைத்தியம் செஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க.கைராசி கூட வாயும் ஜாஸ்தி.எங்க வீட்டு வேலைக்காரியில் இருந்து அவரோட பேஷன்ட் வரைக்கும் எப்பவும் சந்தேகமும் சண்டையும்.

நோயாளிக வீட்டுக்கு இவுரே போய் தான் வைத்தியம் பார்ப்பார்,யாரும் வீட்டு பக்கம் வரக்கூடாது அப்படியே வந்தாலும் எங்க வீட்டில் தான் காத்திருக்கணும்.மீறிபோனா வைத்தியம் கிடையாது.எங்க வீட்டிலையும் அவரு தான் குடும்ப கம்பவுண்டர் எல்லாத்துக்கும் அவர்கிட்டே தான் (நல்ல)மருந்து.அந்த சமயத்திலே பெரியண்ணாவை இன்ஜினியரிங் காலேஜில் சேர்த்தாங்க,அண்ணா பார்க்க ரொம்ப ஒடிசலா குள்ளமா இருப்பார் அதனால அவருக்கு ஒரே கவலை...காலேஜ் போனா சீனியர்ஸ் கிண்டல் பண்ணுவாங்களேனு.அப்ப தாத்தா சொன்னார் நான் ஒரு லேகியம் தரேன் ஒரு வருஷம் சாப்பிட்டு பார்னு. உடனே அப்பாவும் சரி லேகியத்தை கொடுங்கனு சொல்ல தாத்தா ஒரு மாசம் டைமும் இருநூறு ரூபாய் பணமும் வேணும்னு கேட்டார் அப்பாவும் கொடுத்துட்டார்.

அடுத்த ரெண்டு நாளில் ஒரு பெட்டியோட திருவனந்தபுரம் போனவரு அடுத்த வாரத்தில் தூக்க முடியாத அளவு சின்ன பூசணிகாய்களுடன் நேரா எங்க வீட்டுக்கு கொண்டு வந்து தோல்சீவி தரணும்னு அம்மாகிடடே சொல்லிட்டு போய்ட்டார்.அந்த லேகியம் செஞ்சு தரதுக்குள்ளே எங்களை ஒரு வழி(வேலை வாங்கி) பண்ணி காசை மட்டும் நையா பைசா குறைவில்லாம வாங்கிட்டார்.லேகியத்தை சாப்பிட்ட அண்ணா எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ரேஞ்சுக்கு நெஜமாவே குண்டாயிட்டார்(வேலை செஞ்ச கூலிக்கு)கூடவே நானும்.

(வாரேன்)....

Friday, January 2, 2009

விசித்தர தாத்தா - பாகம் 3

படுக்கையான பாட்டிக்கு தாத்தாவோட ஆயுர்வேதம்,அலோபதி வைத்தியம் எதுவும் எடுபடலை.பார்த்துக்க யாரும் இல்லாதலால எங்க அம்மாவே பார்த்துக்கறேனு சொல்லிட்டாங்க.தினமும் காலையில் அம்மா எங்களுக்கு சமைச்சு வெச்சுட்டு,அவங்களுக்கும் காலை டிபனும்,மதிய சாப்பாடும் எடுத்துட்டு தாத்தா வீட்டுக்கு போயிடுவாங்க.அங்க பாட்டிக்கு ஆயில் மசாஜ் பண்ணி குளிக்க,சாப்பிட வைக்கணும்.சாயங்காலம் வரைக்கும் அங்க இருந்துட்டு,அப்புறம் வீட்டுக்கு வந்து நைட்டுக்கு சமைச்சு பெரியண்ணாகிட்டே(16 அல்லது17 வயது)கொடுத்து அனுப்புவாங்க.நைட்டியுட்டி அண்ணாவுக்கு.


இப்படியே இரண்டு வருஷ காலம் ஓடுச்சு.பாட்டியும் கொஞ்ச கொஞ்சமா நினைவை இழந்துட்டே வந்தாங்க,அப்படி இருக்க ஒரு நாள் விடிகாலை ரெண்டு மணிக்கு அண்ணா வீட்டுக்கு ஓடிவந்தவர் அப்பா,அம்மாகிட்டே விஷயத்தை சொல்லிருக்கார்.தூக்கத்திருந்த என்னை எழுப்பி பக்கத்துவீட்டில் கொண்டு போய் விட்டுட்டு அவங்களுக்கும் விஷயத்தை சொல்லிட்டி என்கிட்டே மட்டும் அங்க வரகூடாதுனு மெரட்டிட்டு போனாங்க.


பாவம் தாத்தா யாராவது சொந்தகாரங்க வருவாங்கனு எதிர்பார்த்தார் ஆனா யாரையும் வரக்காணோம்.ஆனா நா மட்டும் பக்கத்து வீட்டு அக்காவெ கூட்டிட்டு தாத்தா வீட்டுக்கு போய்ட்டேன்(தோலை மட்டும் தான் உரிக்கலை எனக்கு,மிச்சம் எல்லாம் கிடைச்சுது).எல்லாரும் அழுதாங்க கூட சேர்ந்து நானும்.தெரிஞ்சவங்க எல்லாரும் சேர்ந்து பணத்தை போட்டு ஆக வேண்டிய காரியத்தை எல்லாம் செஞ்சாங்க.

தனிமை தாத்தாவை ரொம்பவே பாதிச்சிருச்சு போல...எல்லார்கிட்டேயும் சிடுசிடுனு பேச ஆரம்பிச்சார்.அதுவரைக்கும் அவருடைய வைத்தியத்துக்கு(அவ்வளவு பிரபலம்) கணக்கே பேசாதவர்,இவ்வளவு தந்தாதான் வருவேன்னு அடமா இருக்க ஆரம்பித்தார். பாட்டி இறந்ததுக்கு வராததால பேரபசங்களையும் வெறுக்க ஆரம்பிச்சுட்டார்.பணத்தை கொடுக்கறதையும் நிறுத்திட்டார்.இப்படியாய்ட்ட தாத்தாவை எங்கப்பா,பாவம் போனாபோகட்டும்னு எங்க பக்கத்து போர்ஷனில் குடியிருக்க வெச்சார்.குடி வந்த அன்னைக்கு தாத்தா கொண்டு வந்த சாமான்களை பார்த்து அந்த வீதி ஜனங்க ஆஆனு வாயை பொழந்துட்டாங்க.......

(வாரேன்)....