Thursday, March 26, 2009

மழை நாளில் தயிர் சாதம் with ப்ரூ காபி


நேற்று இரவு துபாயில் ஆலங்கட்டி மழை...கண் கொள்ளா காட்சியா இருந்தது.கோடை கால தொடக்கம் இங்கே, ஆனாலும் கடந்த இரண்டு நாளா மேகமூட்டத்துடன் சூட்டை தனித்துக்கொண்டிருக்கிறது.மழை என் நினைவுகளை கொஞ்சம் பின்னாடி கொண்டுபோயிடுச்சு.

சின்ன வயசில் மழை பெய்யும் பொழுது யார் வீட்டில் விளையாடிட்டு இருந்தாலும் உடனே எங்க வீட்டுக்கு ஓடி வந்திடுவேன்.சின்னதா ஒரு தாழ்வாரம் எங்க வீட்டில் இருந்துச்சு அங்க மழை தண்ணி புடிக்கறதுக்காக அண்டா,குண்டா, தவலைனு(பாத்திரங்களோட பேரு) வெச்சிருப்பாங்க.மழையில நனைஞ்சிட்டே இந்த பாத்திரங்களோட விளையாடுறது ரொம்ப பிடிக்கும்.

அப்பவெல்லாம் மழைதண்ணி தங்கத்துக்கு சமம்..ஏன்னா குடிக்கறதுக்கு மட்டும் நல்ல தண்ணி கிடைக்கற ஊர் அது. அதுல மழை தண்ணில துணி துவைச்சா நல்லா அழுக்கு போகும்கறதால..தண்ணியை சிமெண்ட் தொட்டில ரெண்டோ மூணோ மாசத்துக்கு பத்திரமா வெச்சிருப்பாங்க.அந்த தண்ணியை வெளையாடுறதுக்கு எடுத்துட்டோம்னா அவ்வளவு தான்...எது அம்மா கையில கிடைக்குதோ அன்னைக்கு அதுல தான் பூஜை.

பத்தாவது படிக்கும் போது மறுபடியும் வீடு மாறிட்டோம்.இந்த வீட்டை சுத்தி ரெண்டாள் உயரத்துக்கு காம்பவுண்டு சுவர்.எப்பவும் கோட்டைக்குள்ளே இருக்கற மாதிரி ஒரு பீலிங்.இந்த வீட்டுக்கு பாட்டி வீட்டிலிருந்த அக்காவும் வந்துட்டா.பக்கத்திலேயே நூலகம் இருந்ததால தினம் தினம் புத்தகம் எடுத்துட்டு வருவேன்.தூங்கற நேரம் தவிர எல்லா நேரமும் புத்தகம் படிச்சிட்டே இருப்பேன்..ஆனா பள்ளி பாடங்களை படிக்கற கெட்டபழக்கம் மட்டும் இருக்கலை.

மழை மாதிரியே ரொம்பவும் பிடிச்சது தயிரும்,ப்ரூ காபியும்.அம்மா அடிக்கடி திட்டிகிட்டே இருப்பாங்க... இவ குடிக்கற காபிக்கும்,சாப்பிடற தயிருக்கும் பத்து எருமை இருக்கிற வீட்டில தான் கட்டிக்கொடுக்கணும்னு.இதை கேட்டுட்டிருந்த அக்கா சொன்னா..இவளை பார்த்தவுடனே பத்து எருமையும் ஓடிப்போயிரும்னு...அந்தளவு என்னோட ஒன்றிபோயிருந்தது.

இந்த வீட்டிலும் அக்காவோட மழையில் ஒரே கொண்டாட்டம் தான்.மழை வந்தா அன்னைக்கு கண்டிப்பா ராத்திரியில் கரண்ட்டும் இருக்காது கொசுக்கடியால் தூக்கமும் வராது.அப்ப நேரம் போகணும்னு லாந்தர்(விளக்கு)பொருத்தி வெச்சுகிட்டு கதை புத்தகம் படிச்சிட்டு இருப்பேன்.இப்படியே விடிகாலை ரெண்டோ மூணோ மணியாயிடும்..நல்லா பசியெடுக்கும்,நேரா சமையல் ரூமுக்கு போயி நானே காபி தயார் பண்ணிட்டு அதோட சாப்பாட்டில் தயிரையும் ரசத்தையும் ஒண்ணா கலந்து எடுத்துட்டு வந்து..அப்புறம் என்ன ஒரு வாய் சாதம் ஒரு வாய் காபினு அஞ்சு மணி வரைக்கும் ஓடும்.

இதை சாப்பிட்டு முடிக்கறதுகுள்ள தூக்கம் கண்ணை அசத்தும்.அப்படியே தூங்கிட்டு எட்டு மணிக்கு அரக்க பரக்க எழுந்திருச்சு ஸ்கூலுக்கு ஓடுவேன்.இப்படி எத்தனையோ நாள்,வருஷங்கள் என் கூட இந்த மூணும் இருந்தது.இப்ப என்னால இப்படி ஒரு காம்பினெஷனில் சாப்பிடமுடியுமானு தெரியலை.இப்ப கொழுப்புசத்து நீக்கப்பட்ட பாலும் தயிருனு ஆயிடுச்சு. இப்ப எப்பவாவது ஹோட்டலில் மட்டும்னு தான் காபினு ஆயிடுச்சு.

எதேச்சையா நேத்து ஹோட்டலிருந்து வந்த பார்சலில் ஒரு கப் காபியும் இருந்தது.மழையை ரசிச்சுகிட்டே காபியும் குடிச்சேன். தயிர் சாதம் மட்டும் துணைக்கு இல்லை.இப்பவும் மாறாம இருக்கறது மழை பெய்யும்போது வீட்டில் இருக்கணும்னு நினைக்கறது.

8 comments:

  1. அருமைங்க...துபாயிலே மழை வந்தது உங்களைப்போல பலரை பதிவு போட வச்சிடுச்சி...அடுத்த முறை மழை வரும் போது உங்களுக்குப்பிடிச்ச தயிர்சாதமும் சேர்ந்து கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கறேன்...

    ReplyDelete
  2. போச்சி போங்க. இங்க எழுதி வச்ச கமெண்டு பிரிவியூ பாக்கறத்துக்குள்ள காணாம போயிடுச்சி. இருக்கட்டும். அதுக்காக விட்ருவோமா என்னா?

    இங்க தோஹாலயும் இன்னக்கி நல்ல மழை(ஒரு வழியா காரை கழுவியாச்சில்ல). நாங்க சின்ன வயசுல உங்களை மாதிரி பாத்திரம், தண்ணி புடி, வெள்ளாட்டு எல்லாம் கெடையாது. சகதில சண்டைதான். வேணும்னு ஒண்ணும் ஆரம்பிக்கறது இல்ல. அது அப்பிடி அப்டியே...பேப்பர்...கப்பல்... கல்லெறி...கைகலப்புன்னு தானா ஆயிடும். அத விடுங்க. மழைத்துளி தரைய தொட்ட ஒடனே அந்த சூட்டு மண்ணுல இருந்து ஒரு மணம் கெளம்புமே, அனுபவிச்சி இருக்கீங்களா? அத விட மழைக்கு முன்னால ஒரு கிளைமேட் இருக்குமே. லேசா குளிர்ர காத்தோட ஒரு மூடின வானம்..ரொம்ப பழச கெளறி விட்டுட்டீங்க...நன்றி... நன்றி.. நன்றி...

    ReplyDelete
  3. வணக்கம் கீழை ராஸா!

    என்ன பண்றது சொல்லுங்க..ஊரு விட்டு வந்து இருக்கும் போது இப்படியெல்லாம் அடிக்கடி நினைவுகள் பின்னோக்கி போயிடுது.

    ReplyDelete
  4. வணக்கம் விஜய்!

    இங்க எங்கங்க மண் வாசனை இருக்கு!! இந்த மாதிரி பதிவை போட்டு மனசை ஆத்திக்க வேண்டியது தான்.

    ReplyDelete
  5. :-)

    ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  6. வணக்கம் சென்ஷி அவர்களே!

    வரவுக்கு மிக்க நன்றி.மழையில்லா ஊருல மழை வந்ததால பழைய நினைவும் வந்திருச்சு.

    ReplyDelete
  7. உங்கள் நடை தேர்ந்த எழுதாளர் எழுதுவதுபோல இயல்பாயும் அனுபவத்தோய்ப்பு நிரம்பியதாகவும் இருக்கிறது. தயிரையும் ரசத்தையும் கலந்து சாப்பிட்டது உங்களது வித்தியாசமான ரசனையைக் காட்டுகிறது. நீங்கள் ஊடகங்களுக்கு எழுதலாம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பெரிய எழுத்தாளராவது உறுதி!

    ReplyDelete
  8. வணக்கம் லதானந்த்!

    உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.இப்பவும் ரசமும் தயிறும் தான் என்னோட பேவரிட்.

    ReplyDelete